Friday, June 21, 2019

தவறான வழிபாடு (முக)


 தவறான (false) வழிபாட்டு முறை (முழுமையான கட்டுரை)


D 104-TM-இம.ஆமு.க)
உண்மை கடவுள் (THE TRUE GOD) மற்றும் தொழில் தெய்வம் (GOD OF PROFESSION)

தெய்வத்தை’ வழிபடுங்கள்! வளர்ச்சியின் உச்சத்தை அடையுங்கள்!

1.   மனம் ஒரு கோவில்!
சாமி உருவச் சிலையைப் பார்த்து “கடவுளே எனது குடும்பத்தை காப்பாத்து” என்று வழிபடுகிறீர்கள்; சாமி படத்தைப் பார்த்து “கடவுளே எனது குடும்பத்தை காப்பாத்து” என்று வழிபடுகிறீர்கள். ஏதாவது துன்பம் ஏற்பட்டுவிட்டால் “எனது குடும்பத்தை இந்த பிரச்சனையிலிருந்து காப்பாத்து” என்று தனிமையில் வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளோ வழிபடுகிறீர்கள்.

2.   இப்பொழுது, வழிபடுபவரின் மனதினை நான் எடுத்து விடுகிறேன். என்ன நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்! அவரால் வழிபாடு செய்வது மட்டுமல்லாது, எந்த செயல்பாட்டிலும் ஈடுபட முடியாது! இருந்த இடத்திலேயே ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருப்பார்!. மனதில்தான், கடவுளிடம் வேண்டிக்கொள் என்ற எண்ணம் தோன்றி “கடவுளே எனது குடும்பத்தை காப்பாத்து” என்று மனதிலேயே உரக்கவோ அல்லது மனதிற்குள்ளோ வேண்டிக்கொள்கிறீர்கள். ஆகவே மனம்தான் மனிதனுக்கு எல்லாமாகவும் விளங்குகிறது. எனவே மனமே ஒரு கோவில்! இனி மனதினில் உண்மைக் கடவுள் தங்கியிருக்கும் கர்ப்பகிரகம் எங்கிருக்கிறது? என்று பார்ப்போம். 

3.   நாம் எதற்காக கடவுளை வணங்குகிறோம்; வழிபாடு செய்கிறோம்?
நாம் நோய் நொடி இல்லாமல், நலமாக வாழ்வதற்கும், நாம் நினைப்பது நடந்தேறுவதற்கும், துன்பம் துயரங்கள் இல்லாமல் வாழ்வதற்கும், நமது வாரிசுகள் வளமான வாழ்வு பெறுவதற்கும், பொருளாதார நிலை உயர்வதற்கும் இறைவனுக்கு வழிபாடு செய்கிறோம். அதாவது மேற்சொன்னவை நடப்பதற்கு, உங்களுக்கு ஆன்மீக ஆற்றல் அதாவது இறைவனின் அருள் கிடைக்கவேண்டும். ஆகவே வழிபாட்டின் நோக்கம் இறைவனின் அருளைப் பெறுவதுதான்.

4.   மேற்குறிப்பிட்டவை எவ்வாறு நடந்தேறுகின்றன! கோவிலுக்கு சாமி கும்பிட ஒரு பெண் புறப்படுகிறார்; புறப்படும்போதே “சாமியை வழிபாடு செய்து, நமது கஷ்டங்களை போக்கிக் கொள்ள போகிறோம்” என்ற எண்ணத்தில் மகிழ்ச்சி நிலவுகிறது; அதன் மூலம் அவரது மனதில் நிரம்பியுள்ள மனக்கவலையும் மனவழுத்தமும் சிறிதளவு குறைகிறது. நடந்து கோவிலுக்குச் செல்கிறார்; கோவிலுக்குப் போகும்வரை மிகவும் தூய்மையாக இருக்கிறார்; அதாவது எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அவர் எவருக்கும் தீங்கு செய்வதில்லை; அதனாலே, அவர் மனதில் மனவழுத்தம் சேருவதில்லை: அவர் கவனம் முழுக்க “சாமி கும்பிடப் போகிறோம்; நமது கஷ்டங்கள் தீரப் போகப் போகுது” என்ற நேர்மறை எண்ணங்களால் (Positive thoughts) நிரப்பப் படுகிறார்.

5.   நேர்மறை எண்ணங்கள் என்பவை எவை? எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஒருவர் எவருக்கும் தீங்கு செய்யாமலிருக்கும்படியாக தோன்றும் எண்ணங்கள்தான் நேர்மறை எண்ணங்களாகும். அதனாலும் அவர் மனதில் உள்ள மனவழுத்தமும் மனகவலையும் குறைகிறது. கோவிலுக்குச் சென்று சாமி சிலைக்கு முன்பு “கடவுளே! எனது குடும்பத்தைக் காப்பாத்து; எல்லோருக்கும் நல்ல சுகத்தைக் கொடுக்கனும்; எனது கணவருக்கு மீண்டும் வேலையில சேரனும்; எனது பையன் பரீட்சையில நல்ல மார்க் வாங்கி, காலேஜில சேரனும்; எனது இரண்டாவது மகளுக்கு நல்ல மாப்பிள்ளை அமையனும்; மாசமா இருக்கிற எனது மூத்த மகளுக்கு சுகபிரசவம் ஏற்படனும்; குடும்பத்தில உள்ள பண கஷ்டம் போகனும்! கடவுளே எங்களுக்கு எல்லாவாமாக இருந்து நீதான் காப்பாத்தனும் சாமி!” என்று கடவுளை வேண்டுகிறார். வீடு திரும்பும் வரை அவருடைய மனம் மகிழ்ச்சியில் இருக்கிறது; அவரது மனம் முழுக்க “ சாமியை கும்பிட்டு வருகிறோம்; எல்லாம் நல்லது நடக்கும்” என்ற நேர்மறை எண்ணங்களால்  நிரப்பப்பட்டிருக்கிறார். ஆகவே மனதில் வேறு எதிர்மறைக் எண்ணங்கள் (Negative thoughts)  புகாமலிருக்கிறது. எதிர்மறை  எண்ணங்கள் என்பவை எவை? எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஒருவர் பிறருக்கு தீங்கு செய்யும்படியாக தோன்றும் எண்ணங்கள்தான் எதிர்மறை எண்ணங்களாகும்.  இதனால் மனவழுத்தம் சேருவதில்லை; இப்படியாக அவர் மனதில் மேலும் மனவழுத்தம் சேராமலும், இருக்கிற மனவழுத்தத்தை வெளியில் அனுப்பும் செயலும் ஓரே நேரத்தில் நடைபெறுகிறது.

6.   இவ்வாறு அவர் வீட்டை விட்டு வெளியேறி, கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்ப இரண்டு மணி நேரம் ஆவதாக வைத்துக் கொள்வோம். அந்த இரண்டு மணி நேரமும் அந்தப் பெண்ணின் மனதில் அழுத்தம் சேராமலும், இருக்கிற மனவழுத்தமும் வெளியேறிக்கொண்டேயிருக்கும். அதனால், மனம் இலேசாகவிடும்; அப்படி இருப்பதால், எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் தெளிவாக இருக்கும். மனவழுத்தமற்ற மனதில் நேர்மறை எண்ணங்களால் நிரப்பப்படும். அந்த எண்ணங்கள்தான் இறைவன் அருள் கிடைக்க வழி வகுத்துக் கொடுக்கின்றன.

7.   அவ்வெண்ணங்களில் வாழும் இறைவன் பெண் பக்தருக்கு அவரது குடும்பத்தில் நல்லவைகள் நடக்கும்படியாக அருள்புரிகிறான். அப்பக்தை வீட்டிலேயே தினசரி காலை, மாலை இரு நேரமும் வழிபாடு செய்து வந்தால். மனம் இலேசாக ஆகும்; குழப்பமற்ற மனதில் இறைவன் தொடர்ந்து இருப்பான்; அவனின் அருளை வாரி வழங்கிக் கொண்டிருப்பான். ஆனால் இந்துக்கள் தினசரி வழிபாடு செய்வதில்லை; வாரம் ஒரு முறைகூட தவறாது கோவிலுக்குச் செல்வதில்லை. ஆகவே இந்துக்களுக்கு இறைவனின் அருள் தொடர்ந்து கிடைப்பதில்லை.   

8.   வேறு மதத்தைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டிலும், பிரார்த்தனை, செய்யும்போது மேற்கூறிய விளைவுதான் ஏற்படுகிறது. அதாவது மனவழுத்தம் வெளியேற்றப்பட்டு மனம் காலியாக, இலேசாக ஆகிறது. அந்த காலியான இடத்தில் நேர்மறை எண்ணங்களால் நிரப்பப்படுகிறது. இப்படி தொடர்ந்து நேர்மறை எண்ணங்களால் நிரப்பப்படும்போது, நாளடைவில் நேர்மறை குணங்களைப் பெற்றவராகிறார். அவர்கள் கூட்டாகவும், தனித்தனியாகவும், தினசரி காலையும், மாலையும் வழிபாடு செய்கிறார்கள். ஆனால் இந்துக்கள் வழிபாடு அப்படி இல்லை. புத்த மதத்தில் ‘வியாப்சனா’ என்ற தியானம் என்னும் மனபயிற்சியின் மூலம் வழிபாடு செய்யபடுகிறது. இதில் மனவழுத்தம் நேரடியாக மனதை விட்டு வெளியேற்றப்பட்டு மனம் காலியாக ஆகிறது; காலியிடத்தில் நேர்மறை எண்ணங்கள் நிரம்புகின்றன; அவ்வெண்ணங்களில் இறைவன் வாழ்ந்து ஆன்மீக ஆற்றலை வழிபடுபவர்களுக்கு வழங்குகிறான். ஆகவே இறைவன் அருள் பெற, மனவழுத்தமும் மனகவலையும் மனதிலிருந்து வெளியேற வேண்டும்.  வழிபாடு செய்வதின் அடிப்படை நோக்கம், அவற்றை மனதிலிருந்து வெளியேற்றுவதுதான்.   

9.   இறைவனின் அருளைப்  பெற்றுவிட்டீர்களா?
இந்தியாவில் 120 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவற்றில் பெரும்பாலார் இந்துக்கள்.  இவர்களில் எத்தனைபேர் கோவில்களுக்குச் சென்று, பாரா 3-ல் சொன்ன பலன்களைப் பெற்றிருக்கிறார்கள். 15 முதல் 20 ஆண்டுகள் வரை விரதமிருந்து, பாதயாத்திரைகள் மேற்கொண்டு, இருமுடிகள் சுமந்து வழிபாடு செய்திருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேர் மேற்சொன்ன பலன்களை அனுபவித்திருக்கிறார்கள்.

10.  20 ஆண்டுகள் வரை சென்றவர்கள் கூட “20 ஆண்டாக போய் வருகிறேன். அப்படி ஒன்னும் எனக்கு நல்லது நடக்கல!” என்றுதான் புலம்பக்  கேட்டிருக்கிறேன். உடலை வருத்தி, நிறையப் பொருள் செலவழித்தும், நிறைய கால விரையம் செய்தும் இறைவனின் அருள் என்னும் ஆன்மீக ஆற்றல் கிடைக்கவில்லை என்றால், நமது வழிபாட்டில் குறைகள் இருக்கின்றன என்றுதானே பொருள். அந்தக் குறைகளைக்  கண்டுபிடித்து சரி செய்து விட்டால், நாம் இறை ஆற்றலைக் குறைவின்றி பெறலாம். இறை ஆற்றலைப் பெறுவதற்கு முன்பு ஆன்மீகம் என்றால் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.     

11.  ஆன்மீகம் என்றால் என்ன?
ஆன்மீகம் என்றால், உடற்பயிற்சி என்னும் உழைப்பாலும், மனபயிற்சியாலும் மனித ஆற்றலை பல மடங்கு பெருக்கிக் கொள்ளும் அறிவியல் முறைதான் ஆன்மீகம். அந்த ஆன்மீகத்தால் கிடைக்கும் ஆற்றல்தான் ஆன்மீக ஆற்றலாகும்.

12.  இந்த கொள்கைக்கு இந்து மதம்தான்,  நடைமுறை உதாரண விளக்கம் கொடுத்திருக்கிறது. அதற்கு நாம் பெருமைப் படலாம். இந்துக்கள் பாதயாத்திரை மேற்கொண்டு மலை உச்சியில் உள்ள கோவிலில் உள்ள தெய்வத்தை வணங்கி வருகிறார்கள். அதாவது பாதயாத்திரையின் மூலம் உடற்பயிற்சியை மேற்கொள்ளுகிறார்கள். கோவிலில் மனபயிற்சி வழிபாடு செய்ய வேண்டும். அங்குதான் இந்துக்கள் தவறு செய்கிறார்கள். ஆனால் சாமியின் உருவச் சிலையை பார்த்துவிட்டு, தெய்வ தரிசனம் நன்றாக கிடைத்தது என்றும் தடங்கல் இல்லாமல் அம்மனைப் பார்க்க முடிந்தது என்றும் மகிழ்ச்சி அடைந்து, அர்ச்சகர் தட்டில் ரூபாயைப் போட்டுவிட்டு, அவர் அளிக்கும் திருநீரைப் பூசிக்கொண்டு ஊர் திரும்புகிறார்கள். இங்கு மனபயிற்சி சிறிதளவு கூட இல்லை. இது ஒரு பெரிய குறைபாடு!

13.  மற்றொரு குறைபாடு என்னவென்றால், பாதயாத்திரை அறுபது, எழுபது கிலோமீட்டர் வரை நடக்கிறார்கள். இது உடலை வருத்திக்கொள்ளுவது ஆகும்; உடலின் நடை திறன் ஒரு நாளைக்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குத்தான் நடந்து, மலை ஏறவேண்டும். தினசரி உணவு உண்கிறோம். பிறகு உழைக்கிறோம். அதற்கு பிறகு ஓய்வு எடுக்கிறாம். இதேபோலத்தான், தினசரி மனபயிற்சியையும், உடற்பயிற்சியையும் நமது அன்றாட செயல்பாடுகளில் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதைவிட்டுவிட்டு, ஒரு ஆண்டுக்கும் சேர்ந்து, ஐம்பது, நூறு கிலோமீட்டர் பாதயாத்திரை செல்லுவது உடலை பலவீனமடையத்தான் செய்யும்.

14.  எனது திருச்சி நண்பர் ஒருவர், மத்திய வயதைத் தாண்டியவர், பக்தி வெறிகொண்டு திருப்பதி வரை பாதயாத்திரை செல்வது என்று முடிவெடுத்து, புறப்பட்டிருக்கிறார். இருபது கிலோ மீட்டர் வரை நடந்து கொண்டிருக்கும் போது,திடீர் என்று ‘ஹார்ட் அட்டாக்’ ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு நலமாகி வீடு திரும்பியிருக்கிறார்.  அப்படி பாதயாத்திரை செல்வதை இறைவனும் விரும்பவும் மாட்டான். ஏனென்றால் மனிதன் நலமுடன் இப்பூமியில் வாழ வேண்டும் என்பதற்காகவே மற்ற உயிரினங்களையும், படைப்புகளையும் படைத்திருக்கிறான். 

15.  கோவிலுக்குச் சென்று எப்படி வழிபட வேண்டும்?
தினசரி நடக்கும் திறனுக்குத் தகுந்தவாறு நடந்து, மலையில் ஏறி முடித்தவுடன், கோவிலில் உட்கார்ந்து இறைவனைப் பற்றிய பாடல்களைப் பாடலாம்; பிரார்த்தனை செய்யலாம்; திருக்குறளைப் படிக்கலாம்; திருவாசகம், திருப்பாவை, இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து பக்கங்களைப் படிக்கலாம் வழிபாட்டுக்குரிய மருத்துவ மனபயிற்சி (Medicinal Meditation) செய்யலாம்.. அதன் மூலம் பக்தர்களுக்கு மருத்துவ மனபயிற்சி கிடைக்கிறது. உடற்பயிற்சியும், மனபயிற்சியும் சேர்ந்து செய்யும் போதுதான்  பக்தர்களுக்கு  முழு நிறைவான ஆன்மீக ஆற்றல் கிடைக்கிறது.

16.  இதற்கு உதாரணம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் உடற்பயிற்சி மட்டும் செய்தார். ஆகவே தனது ‘இமேஜை’ காப்பாற்றிக்கொள்ள பெரும்பாடு பட்டார். வெளியில் செல்லும்போதெல்லாம், தொப்பியும், கூலிங் கிளாஸ் கண்ணாடி போட்டுக்கொண்டுதான் செல்லுவார். நல்லவராகத்தான் நடிப்பார். வில்லன் வேடத்தில் நடிக்க மாட்டார்.

17.  மேற்கூறியதற்கு எதிர்மாறாக சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் செயல்பாடுகள் இருக்கும். ’இமேஜை’க்’ காப்பாற்றிக்கொள்ள சிரமப்பட்டதே இல்லை; வாயில் சிக்ரெட்டுடன், மேக்கப் இல்லாமல், வழுக்கைத் தலையுடன், முகச் சவரம் செய்யாமல் சிரித்துக்கொண்டே ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பார். கதாநாயகன், வில்லன் ஆகிய இருவேடங்களிலும் நடிப்பார். மக்கள் அப்படியும் அவரை ஏற்றுக் கொண்டார்கள். அதற்குக் காரணம், சூப்பர் ஸ்டார் தியானம் என்னும் மனபயிற்சியும், யோகாசனம் என்னும் உடற்பயிற்சியும் தவறாது செய்து வருகிறார். முன்னவர் உடற்பயிற்சி மட்டும் செய்து வந்தார். பின்னவர் உடற்பயிற்சியும், மனபயிற்சியும் சேர்ந்து செய்து வருகிறார்.

18.  வழிபாட்டு முறையில் மூன்றாவது குறைபாடு!
இது மிகப்பெரிய குறைபாடு! இடம் மாறி இறைவனை வழிபாடு செய்கிறீர்கள்! நீங்கள் வழிபடும் இறைவன், உங்களுக்காக ஓரிடத்தில் நிலை கொண்டிருக்கிறான். ஆனால் நீங்களோ வேறொரு இடத்தில் வேறொரு பொருளில், அப்பொருளுக்காக நிலை கொண்டுள்ள இறைவனை வழிபாடு செய்கிறீர்கள். வெளிப்படியாகச் சொல்லுகிறேன்! உங்களிடம் குடி கொண்டுள்ள உண்மைக் கடவுளை விட்டுவிட்டு, கல், இரும்பு,மற்ற உலோக கலவைகளினால் செய்த உருவங்களில் குடிகொண்டுள்ள கடவுளை வணங்குகிறீர்கள். மேற்சொன்ன மூன்று குறைபாடுகளினால்தான், நீங்கள் உடலை வருத்தி, ஏராளமான பொருட் செலவில், காலத்தை விரயம் செய்தும், உங்களுக்கு தேவையான ஆன்மீக ஆற்றலை உங்களால் பெற முடியவில்லை.   

19.  இறைவன் இடம் மாறி எங்கிருக்கிறான்?
இறைவன் ஒருவன் உண்டா? அப்படி இருந்தால் அவன் எங்கிருக்கிறான்? உருவமாக இருக்கிறானா? அருவமாக இருக்கிறானா? எல்லோருக்குமே  தெரியும் “இறைவன். பறவையில் இருக்கிறான்; மிருகத்தில் இருக்கிறான்; புளு, பூச்சிகளில் இருக்கிறான்;மரம் மட்டைகளில் இருக்கிறான்; செடி, கொடிகளில் இருக்கிறான். உலோகமான இரும்பில் இருக்கிறான்; கல்லில் இருக்கிறான்; மண்ணில் இருக்கிறான்; ஏன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும்கூட இருக்கிறான். துரும்பிலும் கூட இருக்கும் இறைவன், அவனின் உயர்ந்த படைப்பான மனிதனிடம் இருக்க மாட்டானா? இருப்பான்!; இருக்கிறான்!

20.  இந்த அண்டத்தின் (Universe) அனைத்துப் பொருட்களிலும் இறைவன் ஏன் இருக்க வேண்டும்?
இந்த அண்டம் தொடந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது; அண்டம் விரிந்துகொண்டே சென்றுகொண்டிருக்கிறது; புதிது புதிதாக நட்சத்திரங்கள் (Stars) தோன்றிக் கொண்டே இருக்கின்றன. உயிரினங்கள் வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றன. ஆகவே இந்த அண்டத்திற்கு, பரிணாம வளர்ச்சிதான் (Evolution) அடிப்படை கொள்கையாக விளங்குகிறது. எனவே பரிணாம வளர்ச்சிதான் இறைவன் என்று சொல்லலாம். இந்த பரிணாம வளர்ச்சிக்கு ஒரு அறிவு இருந்து செயல்பட வேண்டும். அந்த அறிவை மகான் மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் ஆக்க அறிவு (Creative Inteligence) என்கிறார்.

21.  மேற்சொன்ன பரிணாம வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்த சக்தியாக இருந்தாலும், அந்த சக்தி அழிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, ஒரு வீட்டில் கொள்ளையடித்து, பணம் நகைகளை எடுத்துச் செல்லும்போது, பொருட்களை பறிகொடுத்தவருடைய வளர்ச்சி தடைபடுகிறது. இவ்வாறு மனித இன வளர்ச்சி தடைப்படும் என்பதால்தான், குற்றவாளிகள் தடயங்களை விட்டுச் செல்கிறார்கள். அந்தத் தடயங்களை வைத்து குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள்.

22.  பரிணாம வளர்ச்சி (Evolution) மனிதனுக்கு எந்த வகையில் உதவியாக இருக்கிறது.
ஆக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மனிதனின் வளர்ச்சிக்காகப் படைக்கப்பட்டவைதான். மிருகங்களும், பறவைகளும், மரங்களும், தாவரங்களும்,உணவுக்காகப் படைக்கப்பட்டவை; கற்களும், உலோகங்களும், வேதியல் பொருட்களும் மனிதனின் நாகரிக வளர்ச்சிக்காக படைக்கப்பட்டவை; கற்களிலும், இரும்பிலும் இருக்கும் இறைவன் அவற்றைக் கொண்டு வீடுகள் கட்டி மனிதன் வெயில், மழை மற்றும் காட்டு மிருகங்களிடமிருந்து பாதுகாப்பாக வாழ உதவி செய்கிறான். மற்ற உயிரினங்கள் மனிதனின் பரிணாம வளர்ச்சியை ஊக்கப்படுத்தவே படைக்கப்பட்டவை என்பதற்கு ஒரு நடைமுறை உதாரணத்தை, நடந்த நிகழ்ச்சியின் மூலம் விளக்குகிறேன். 24-5-2019 அன்று காகம் ஒன்று நான் உட்கார்ந்த இடத்திலிருந்து மூன்றடி தூரத்தில் உள்ள ஒரு இரும்பு கைப்பிடி சுவற்றில் உட்கார்ந்து கொண்டு என்னை நோக்கி கத்துகிறது. உடனே எனது மனதில் “விருந்தாளி ஒருவர் வரப்போகிறார்” என்ற எண்ணம் என் மனதில் உதித்து, மகிழ்ச்சியைக் கொடுத்தது. மறுநாள் எனது உறவினர் ஒருவர் பெங்களூரிலிருந்து எஙகளுக்கு உதவுவதற்காக வந்தார். இவ்வாறு காகம் உறவினர் வருவதை முன்கூட்டியே தெரிவிக்கப்படைக்கப்பட்டிருக்கிறது. நன்றியுள்ள நாய், மனித இனப்பாதுகாப்பிற்குப் படைக்கப்பட்ட மிருகம்.  ஆகவே கற்கள் இரும்பு போன்ற உலோகங்களில், இறைவன் இருந்துகொண்டு, அவற்றின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுக்கிறான்.

23.  நிலக்கடலைச் செடியை வேறோடு பிடுங்கிப் பார்த்தால், வேரில்  சிறு சிறு முத்துகளைப் போல, சிறிதும் பெரிதுமாக இருக்கும். அந்த முத்துக்களில்தான், இறைவன் தங்கி, அந்த கடலையின் வளர்ச்சியைப் பார்த்துக் கொள்கிறான். முட்டையில் மஞ்சல் கருவில் இறைவன் இருந்து கொண்டு, முட்டையின் வளர்ச்சிக்கும், கோழியின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறான். எனவே எல்லாப் பொருட்களிலும் தங்கி, அந்த அந்த பொருட்களின் பரிணாம வளர்ச்சியை ஊக்கப்படுத்தத்தான் அப்பொருட்களில் இறைவன் தங்கியிருக்கிறான். இதே போல, மனிதனின் பரிணாம வளர்ச்சியை ஊக்கப்படுத்தத்தான், மனிதனில் இறைவன் குடியிருக்கிறான்.

24.  மேலே பார 4, 5-க்களில் ஏற்கனவே பக்தர்களின் நேர்மறை எண்ணங்களில் இறைவன் வாழுகிறான் என்று சொல்லியிருந்தேன். ”எதிர்மறை எண்ணங்களில் வாழாமல், நேர்மறை எண்ணங்களில் மட்டும் இறைவன் ஏன் வாழ வேண்டும்!” என்று நீங்கள் கேட்கலாம். மனிதனின் (பரிணாம) வளர்ச்சி நேர்மறை எண்ணங்களில்தான் இருக்கிறது. கோபம், நாவடக்கம் இல்லாமை போன்ற எதிர்மறை செயல்களால், மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உங்களது அனுபவத்தில் அறிந்திருப்பீர்கள்! உதாரணத்திற்கு நாவடக்கம் இல்லாத அரசியல்வாதிகள் படும் பாட்டை செய்திகள் பறைசாற்றுகின்றன.

25.  சாமி சிலை மனிதனுக்கு இறை ஆற்றலை வழங்காது!
        பொருட்களின் அக ஆற்றல் என்னும் இறை ஆற்றல் வரையறுக்கப்பட்டது (Restricted)
உயிரற்ற பொருட்கள் மற்றும் மனிதன் உட்பட பிற உயிரினங்கள் அனைத்திலும் இறைவன் குடியிருக்கிறான். அவை அனைத்திலும் குடியிருந்து அவற்றின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறான். கோழி முட்டையில், மஞ்சகருவிலிருந்துகொண்டு, கோழி இனப்பெருக்கத்திற்கு வழி வகுக்கிறான். அதோடு அக்கருவிலிருக்கும் இறை ஆற்றல் முடிந்து விடுகிறது அந்த இறை ஆற்றல் அதைத் தாண்டி புறாவின் இனபெருக்கத்திற்கோ அல்லது வேறுபறவை இனபெருக்கத்திற்கோ, வேலை செய்ய ஆற்றல் கிடையாது. ஆகவே மஞ்ச கருவிலிருக்கும் ஆற்றல் வரையறுக்கப்பட்டது. இதே போல, கல்லாகட்டும், இரும்பாகட்டும், ஐம்பொன்னாகட்டும், பஞ்ச உலோகமாகட்டும், அவற்றில் குடியிருக்கும் இறைவன் அப்பொருட்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த மட்டும் ஆற்றல் கொண்டவன். அதற்கு மேல் வேறு பொருட்களுக்கோ அல்லது உயிரினங்களுக்கோ ஆற்றலைக் கொடுத்து வளர்ச்சியை ஊக்கப்படுத்த இயலாது. ஆகவே, கல்லால் ஆன அல்லது உலோகக் கலவைகளால் ஆன சாமி சிலைக்கு இறை ஆற்றல் வரையறுக்கப்பட்டது. அதில் உள்ள ஆற்றலைக் கொண்டு, தன்னை வணங்குபவனுக்கு, இறை ஆற்றலை அளித்து அவனின் வளர்ச்சியை ஊக்க படுத்த இயலாது.

26.  பரிணாம வளர்ச்சியில் மனிதன் சிறந்த இடத்தைப் பெற்றிருக்கிறான்!
மனிதனிடத்திலும் இறைவன், அவனின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக குடியிருக்கிறான். மஞ்சக் கரு வளர்ந்து கோழியாவதைப் போல. அவனிடம் உள்ள இறை ஆற்றலும் வரையறுக்கப்பட்டதுதான். அந்த கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து, அளவுகடந்த இறை ஆற்றலைப் பெறுவதற்குதான், உடற்பயிற்சியும், மனபயிற்சியும் சேர்ந்து செய்யக்கூடிய வழிபாட்டு முறையை கண்டுபிடித்து அதனை தன்னுடைய அன்றாட செயல்பாடுகளில் சேர்த்து செய்து வருகிறான். இந்துக்கள் உடற்பயிற்சியை மட்டும் செய்து மனபயிற்சியை விட்டு விட்டார்கள். அதனால்தான், அந்நிய மதங்களைச் சேர்ந்தவர்களின் அடிமைகளாக சுமார் 400 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம்.

27.  மேற்சொன்ன தடங்களை மற்ற உயிரினங்களால் வெற்றி கொள்ள முடியவில்லை. அவைகளால் வழிபாடு செய்யும் அறிவைப் பெற்றிருக்கவில்லை. ஆகவேதான், மனிதனுக்கு சிறப்பான இடத்தைக் கொடுத்திருக்கிறான். ஆகவே உங்களிடமுள்ள உண்மைக் கடவுளையும், தொழில் தெய்வத்தையும் வணங்கி உச்ச நிலையை அடையலாம்!

28.  வழிபாடு செய்பவர்களுக்கு இறைவனின் அருள் எவ்வாறு கிடைக்கிறது என்பதை சுருக்கமாக விளக்குகிறேன்.
சினிமாவில் காட்டுவதைப்போல, இறைவனின் அருள் வழிபடுபவர்களுக்கு நேரடியாக வருவதில்லை. தொடர்ந்து வழிபாடு செய்யும்போது மேற்குறிப்பிட்டவாறு, மனவழுத்தமும், மனகவலையும் சிறிது சிறிதாக வெளியேறும்போது, மனம் இலேசாக காலியான மனமாகி விடும். காலியான இடம் நேர்மறை எண்ணங்களால் நிரப்பபடும். அவ்வெண்ணங்களில்தான் இறைவன் வாழுகிறான். ஏன் வாழுகிறான் என்பதை பாரா 24 –ல் மேலே சொல்லியிருக்கிறேன். தொடர்ந்து செய்யும்போது, வழிபடுபவரின் நேர்மறைக் குணத்தைப் பெற்று விடுகிறார். அவருக்கு இறைவனின் அருள் அருவியில் நீர் கொட்டுவதைப் போல, தாராளமாக கிடைத்துக்கொண்டிருக்கும்.

29.  பரிணாம வளர்ச்சியில், தற்கால மனிதன், ஒரு நொடியில் இங்கிருந்து உலகில், எந்த ஒரு நாட்டுக்கும் பணம் அனுப்பிவிடுகிறான். இதற்குமேல் அவனின் பரிணாம வளர்ச்சியை சொல்ல வேண்டியதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புகள் அவனுடைய துன்பத்தை, துயரத்தைப் போக்க முடியவில்லையே ஏன்? காரணம் கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சியை ஊக்கப்படுத்தினாலும், மனிதன் செய்யும் குற்றங்களால், பரிணாம வளர்ச்சி தடைபடுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். குற்றங்கள் செய்யாமலே கோடிக்கண்க்கானோர் மனதளவில் துன்பப்படுகிறார்கள்.

30.  மேலே கூறப்பட்ட மக்களின் துன்பங்களைக் குறைக்கத்தான், மகான்கள் தோன்றி மதங்களை நிறுவினார்கள். வெவ்வேறு வழிபாட்டு முறைகள் தோன்றின. ஒரு சில மதங்களில் மனபயிற்சி மட்டும் இடம் பெறும் படியாக வழிபாடுகள் அமைந்திருக்கின்றன. புத்த மதத்தில் தியானம் என்னும் மனபயிற்சி வழிபாடாக அமைந்திருக்கிறது. ஒரு சில மதங்களில் உடற்பயிற்சி மட்டும் இடம்பெறும்படியாக குறிப்பாக இந்து மதத்தில் அறியாமையால் அமைக்கப்பட்டிருக்கிறது. உடற்பயிற்சியும், மனபயிற்சியும் சம அளவில் இருக்கும்போதுதான் ஆன்மீக ஆற்றல் முழு நிறைவாக கிடைக்க வாய்ப்புண்டு என்பதை பாரா 15, 16 மற்றும் 17 களில் சொல்லியிருக்கிறேன்.

31.  நமது வழிபாட்டு முறை சரியில்லாததால் என்ன நடக்கிறது?
நமது வழிபாட்டு முறை சரியில்லாததால், மக்கள், பேராசை, கோபம், பயம், பதட்டம், பொறாமை, பொறுமையின்மை, அமைதியின்மை, பாலியியல் துன்புறுத்தல் போன்ற எதிர்மறைக் குணங்களால் (Negative attributes) ஆட்டிவிக்கப்படுகிறார்கள். ஊழ்வினைகளின் (Fates) பாதிப்புகளாலும் மக்கள் துயரத்திற்குள்ளாகிறார்கள். இந்த  ஊழ்வினைப் பாதிப்புகளாலும், மக்கள் தவறுகள், குற்றங்கள் இழைக்கிறார்கள். ஆகவே அதன் விளைவாக, இப்பொழுது மட்டுமல்ல, எப்போதுமே மக்களை ஆட்டிப் படைப்பது மன அழுத்தமும், மனக்கவலையும்தான். இந்த இரண்டும்தான், மக்களிடையே நோய்கள் தோன்றுவதற்கு முழு முதற் காரணமாக அமைந்து விடுகிறது. ஆகவே நோய்களினாலும், நமது மனக்கவலை அதிகமாகிவிடுகிறது; பொருளாதாரம் மந்த நிலைக்கு வந்து விடுகிறது. மக்களுக்கு வாழ்வே அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது.

32.  மேற்கூறப்பட்ட நிலைக்குப் போகவிடாமல்  மக்களைக் காப்பாற்றுவதற்குதான் மதங்களின் வழிபாட்டு முறைகள் கைகொடுத்தன. ஆகவே மதவழிபாடு, எதிர்மறைக் குணங்களைப் குறைக்கிறது; ஊழ்வினைப் பாதிப்புகளையும் குறைக்கிறது,  அதனால் தவறுகளும், குற்றங்களும் குறைந்து, மன அழுத்தத்தையும், மனக் கவலையையும் போக்கி, நோய்களிலிருந்து விடுபட்டு, பொருளாதார மேம்பாடு அடைய வழிவகை செய்கிறது. நமது வழிபாட்டு முறை மேற்குறிப்பிட்ட நிலையை அடைய உதவியதா? இல்லையே! நாளுக்கு நாள் குற்றங்கள்தான் அதிகரித்து வருகின்றன. மக்களுடைய துன்பங்களும் துயரங்களும் சொல்லொணாத அளவுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. பொள்ளாச்சியில் பெண்பிள்ளைகளுக்கு நடந்த பாலியியல் கொடுமைகள் ஒன்று போதாதா, நமது வழிபாட்டு முறை இளைஞகர்களுக்கு ஒழுக்கத்தையும், பண்பையும் வளரவைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

33.  இந்து மத வழிபாடுதான், மக்களுக்கு ஒழுக்கத்தையும், பண்பையும் காக்கும்படியாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதை நடைமுறைப் படுத்தும்போதுதான் தவறு செய்யப்படுகிறது. நடைப் பயணம் மேற்கொண்டு, மலை உச்சியில் உள்ள தெய்வத்தை வைத்து மனபயிற்சி செய்ய வேண்டும் என்றுதான் நமது வழிபாடு சொல்கிறது. ஆனால் மனபயிற்சி செய்யாமல் திருநீரைப் பூசி வந்துவிடுகிறார்கள். வழிபாட்டின் சிறப்பு அம்சத்தையே சாகடித்து விடுகிறார்கள். தினசரி வீட்டில் இருவேளையும் வழிபாடு செய்வதையும், கூட்டாக வழிபாடு செய்வதால் ஏற்படும் பலன்களையும், நமது இந்து மத தலைவர்கள் எடுத்துச் சொல்லவில்லை; சரியாக வழிகாட்டவும் இல்லை.

34.  ஆன்மீக ஆற்றல் அல்லது இறைவனின் அருள் கிடைத்துவிட்டது என்பதை  எப்படி அறிந்து கொள்ள முடியும்?
ஒருவரைக் கேட்டால், நான் 20 ஆண்டுகளாக, 20 முறை பாதயாத்திரை சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறேன் என்று சொல்கிறார். இன்னொருவர் பதினைந்து ஆண்டுகளாக விரதமிருந்து இருமுடி கட்டி, ஆண்டவனை வழிபாடு செய்திருக்கிறேன் என்று சொல்கிறார். இப்படி பலபேர்கள் இருபது, முப்பது தடவைகள் இறைவனை பல ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து சாமி உருவத்தை வழிபாடு செய்து வருகிறார்கள். அவ்வாறு ஒவ்வொரு தடவை சென்று சாமி தரிசனம் செய்து வந்ததினால், அவர்களுக்கு ஆன்மீக ஆற்றல் எவ்வளவு கிடைத்திருக்கிறது என்று அவர்களால் சொல்ல முடியுமா?

35.  அவர்களால் சொல்ல முடியாது. முதல் காரணம் தவறான வழிபாடுகள். மற்றொன்று ஆன்மீகப் பவரை அளவிட அவர்கள் அனுபவப்படவில்லை. அவர்களுக்கு ஆன்மீக ஆற்றல் கிடைத்திருந்தால், அவர்களுக்கு அதிசயங்கள் நடந்திருக்க வேண்டும். அவர்கள் ஒருவரை சந்திக்க மனதில் நினைத்தால், அவர் அவர்களுக்கு எதிரே வந்துகொண்டிருப்பார்; வி.ஐ.பி ஒருவரைச் சந்திக்க அவருடைய வீட்டிற்கு சென்றால், அவர் மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டு அவர்களுக்காக காத்திருப்பதைப்போல, காத்திருப்பார். “மறுநாள் பையனுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த பணம் குறைவாக இருக்குதே மீதப் பணத்திற்கு என்ன செய்யப் போகிறோம்” என்று கவலையிலிருக்கும்போது, உங்களது நண்பர் வந்து “ இந்தாப்பா! எனது தேவைக்கு உன்னிடமிருந்து பணம் வாங்கிப் போனேன். ஆனால், அந்தப் பணத்துக்கு தேவையில்லாமல் போய்விட்டது. ரொம்ப நன்றிப்பா!” என்று சொல்லி பணத்தைக் கொடுத்து உங்களது கவலையை நீங்கச் செய்வார். இதேபோல உங்களது முயற்சி எதுவுமில்லாமல், உங்களது தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

36.  கோவிலுக்குப் போய்விட்டு வந்த பிறகு நடப்பது என்ன?
மேலும் கோவிலுக்குப் போயிட்டு வந்த பிறகு வருடத்திற்கு வருடம், உங்களது எதிர்மறைக் குணங்களான கோபம், பொறாமை, பதட்டம் முதலியன குறைந்து, பிறருக்கு உதவி செய்யும் மனப்போக்கு வளர்ந்திருக்க வேண்டும். சுருங்கச் சொன்னால், எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாளும் பிறருக்கு கெடுதல் செய்யும் மனப்பாங்கு குறைந்து கொண்டே வர வேண்டும். இறைவன் தன்னிடம் தங்கி இருப்பதை, தான் செல்லும் இடத்துக்கெல்லாம் தன்னோடு வருவதை உணர வேண்டும். ‘எல்லாம் அவன் செயல்’ என்ற உண்மையை நடைமுறையில் உணர வேண்டும். 

37.  எத்தனை ஆண்டுகள் ஆன்மீக யாத்திரை போய்விட்டு வந்தாலும் வந்தவுடனே, குடிக்கவும், மனைவி மக்களை அடித்து உதைக்கவும், சிகரெட் பிடிக்கவும், சூதாட்டம் ஆடவும் செய்தால், ஆன்மீக ஆற்றல் கிடைக்கவில்லை என்றுதானே பொருள்! ஆன்மீக ஆற்றல் கிடைக்காமல், உடலையும் வருத்தி, பல ஆயிரக்கணக்கான ரூபாய்களையும் செலவழித்து, ”இவ்வளவு வழிபாடும் பரிகாரமும் செய்தும் ஒன்றுக் நடக்கவில்லையே” என்று மனச் சஞ்சலத்திற்கும் ஆளாகிறீர்கள்.

38.  ஆன்மீக ஆற்றலை பெற யாரை வழிபட வேண்டும்?
இறைவனிருக்கும் இடத்தை தவறாகப் புரிந்து கொண்டு, வழிபாடு செய்வதுதான், உங்களுக்கு ஆன்மீக ஆற்றல் கிடைக்காததற்கு முழு முதற் காரணமாகும்.  உங்களது வழிபாட்டில் மனபயிற்சி இடம் பெறவில்லை என்பது இரண்டாவது காரணமாகும். “தூணிலும், துரும்பிலும் இருக்கும் இறைவன் கல்லிலும் இருக்கிறான்” என்றுதான், கல்லைச் சிலையாகச் செதுக்கி வழிபாடு செய்கிறோம் என்று சொல்கிறீர்கள். கல்லில் இருக்கும் இறைவன், கல்லின் வளர்ச்சிக்காகத்தான் இருக்கிறான், உலோகக் கலவையில் இருக்கும் இறைவன், உலோகக் கலவையின் வளர்ச்சிக்காகத்தானிருக்கிறான். உங்களுடைய வளர்ச்சிக்காக இல்லை; முட்டையில் மஞ்சள் கருவில் இறைவன் இருக்கிறான் என்பதற்காக, முட்டையை வைத்து வணங்க முடியுமா! உங்களுடைய வளர்ச்சிக்காக உங்களுக்குள் இறைவன் இருக்கிறான். உங்களுடைய வளர்ச்சிக்கு அவனைத்தான் வழிபட வேண்டும்.

39.  அவன் எங்கிருக்கிறான் அவனை வழிபட!
அவன் தன்னிருப்பிடத்தை படித்தவர், படிக்காதவர் என்று பாராமல்,அனைத்து மக்களுக்கும், தொண்டு தொட்டு, தெரியப்படுத்திக் கொண்டே இருக்கிறான். ஆனால் மக்கள்தான் அறியாமையால் அதை அறியாமலிருக்கிறார்கள்; புரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள். கிராமத்தில் இரு பெண்கள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதைப் பார்த்திருப்பீர்கள். பாதிக்கப்பட்ட பெண் கண்களில் கோபம் தெறிக்க சொல்லுவாள் “உன் நெஞ்சைத் தொட்டு சொல்லு, ‘நீ என் ரூபாயை எடுக்கலன்னு!” உடலில் பல இடங்களிருக்க ”நெஞ்சைத் தொட்டு சொல்லு” என்று ஏன் நெஞ்சைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அவள் படியாதவள்; அந்த வார்த்தையை எவரிடமும் கற்று வரவில்லை. தானாகவே வருகிறது.  ”நெஞ்சைத் தொட்டு சொல்லு” என்ற சொல்லில் மறைந்திருக்கும் சொல் “உண்மையைச் சொல்” என்பதாகும். ஆகவே நெஞ்சில் உண்மை மறைந்திருக்கிறது. உண்மைதான் இறைவன்; இறைவன்தான் உண்மை. “வாய்மையே வெல்லும்” ”இறையே வெல்லும்“ “இறைவனே வெல்வான்” இதற்கு ஏதாவது மாற்றுக் கருத்து உண்டா!

40.  உங்கள் மார்பில் உள்ள இறைவன்தான் உங்கள் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறான். உங்கள் வளர்ச்சிக்காக உள்ள இறைவனை விட்டுவிட்டு, கல்லின் வளர்ச்சிக்கும், உலோக வளர்ச்சிக்கும் உள்ள இறைவனை வணங்கினால், உங்களுக்கு வளர்ச்சி எப்படி கிடைக்கும்!.

41.  ஆகவே மக்களுக்கு இறைவன் இருக்கும் இடத்தைத் தெரியப்படுத்தி விட்டேன். அவனை நீங்கள் இனி வழி படலாம். மனம் ஒரு கோவில்; அந்தக் கோவிலில் கர்ப்பக் கிரகமான மார்பில் குடியிருக்கும் இறைவனை வழிபட வேண்டும். ஒவ்வொருவருடைய மார்பிலும் அவன் குடியிருப்பதால், மார்பை நோக்கி மனதை ஈடுபடுத்தி வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டு முறையைத்தான், எனது மருத்துவ மனைக்கு வருபவர்களுக்குச் சொல்லித் தருகிறேன்.

42.  மருத்துவ மனபயிற்சி என்னும் வழிபாட்டு முறையை தினசரி காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் ஒரு வேளைக்கு 20 நிமிடங்கள் என செய்து வர வேண்டும். இரவில் படுக்கையில் படுத்துக்கொண்டே, தூக்கம் வரும் வரை செய்ய வேண்டும். இது ஆன்மீகப் பாதையில் துவக்கம்தான்; இதுதான் இறுதி கிடையாது. இந்த வழிபாட்டு முறையை வாழ்க்கை முழுவதும் கடைப்பிடித்து வர வேண்டும். உங்களுடைய வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைத்துக் கொண்டே வரும்.

43.  இறைவன் உங்களிடம் குடிகொண்டிருப்பதை நீங்கள் அறியாமல் தடுப்பது எது?
அவனுக்கும் (உண்மைக்கும்) உங்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதால்தான், உங்களது மார்பில் குடியிருக்கும் அவனின் இருப்பை உங்களால் உணர முடியவில்லை; அறிய முடியவில்லை. உங்கள் பாதுகாப்புக்காக, உங்களுடனேயே அவன் வருவதை உணர முடியவில்லை; “எல்லாம் அவன் செயல்” என்ற தாரக மந்திரத்தை நம்ப முடியவில்லை. எல்லாத் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிக்கிறீர்கள். அந்த இடைவெளி எதனால் ஏற்பட்டது? அந்த இடைவெளி வெற்றிடமாக இருக்கிறதா! அல்லது எதனாலும் நிரப்பப்பட்டுள்ளதா? வெற்றிடமாக இல்லை; மன அழுத்தத்தாலும், மனக்கவலையாலும் நிரப்பப்பட்டுள்ளது.

44.  மார்பில்தான் மனவழுத்தமும் மனக்கவலையும் நிரம்புகிறது என்பதை எப்படி அறிய முடியும்!
மார்பில்தான் மனகவலை நிரம்புகிறது என்பதை இறைவன் மக்களுக்கு தொன்றுதொட்ட காலத்திலிருந்தே தெரிவித்து வருகிறான்.  இதனை விளக்கவும் மறுபடியும் கிராமத்துக்கே வருகிறேன். பள்ளிக்கூடத்திற்கே செல்லாத இரு பெண்கள் சண்டை போடுகிறார்கள். அந்தச் சண்டையில், பாதிக்கப்பட்ட பெண், மற்றொரு பெண்ணைப் பார்த்துக் கோபத்திடன் சொல்லுகிறாள் “நீ எனக்குச் செய்த துரோகத்தை நினைத்தால், என் நெஞ்சே கணக்குது!” அந்தப் பெண் செய்த துரோகத்தினால் ஏற்பட்ட மனவழுத்தமும், மனக்கவலையும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மார்பில்தான் சேர்ந்திருக்கிறது; அதனுடைய சேர்க்கையினால்தான் மனம் கணக்கிறது.

45.  மேற்கூறிய நிகழ்விலிருந்து, நாம் ஒரு முடிவுக்கு வரலாம். அதாவது, மார்பில் சேர்ந்துள்ள மன அழுத்தமும் (மஅ), மனக்கவலையும்தான் (மக) மார்பின் அடியில் உள்ள இறைவனை (உண்மையை) உணர முடியாமல், அறிய முடியாமல் மற்றும் இணையவிடாமல் தடுக்கிறது. மனவழுத்தத்தையும், மனக்கவலையையும் அகற்றிவிட்டால், இறைவனை (உண்மையை) உணர முடியும்; அறிய முடியும்; அவனோடு இணையவும் முடியும். மதங்கள் அளிக்கும் மனபயிற்சி மேற்கூறிய இரண்டையும் (மனவழுத்தத்தையும், மனக்கவலையையும்) முற்றிலுமாக அகற்ற முடியவில்லை. அதனால்தான், அந்த மதத்தினரிடையேயும் பிறருக்கு, எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் கெடுதல் செய்யும் மனபாங்கு இருக்கத்தான் செய்கின்றன. இந்து மத வழிபாட்டில் மனபயிற்சியே இல்லாததால், மஅ,மக-யும் அப்படியே அகற்றபடாமலிருக்கிறது. அதனால் இந்து மக்களுடைய துன்பமும் துயரங்களும் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கின்றன.

46.  அந்த இரண்டும்தான் நீங்கள் இறைவனைப் பார்க்க முடியாமலும், இறைவனோடு ஐக்கியமாக முடியாமலும் தடுத்துக் கொண்டிருக்கிறது. மேற்கூறிய இரண்டையும் நீக்கி இறைவனோடு ஐக்கியமாவதற்குதான், மதங்கள் தோன்றி, அவற்றில் மனபயிற்சியை புகுத்தி வழிபாட்டு முறைகள் தோன்றின. அந்த  வழிபாட்டு முறைகள் முழுமை பெறாததால், இறைவனின் இருப்பை உணர்ந்து, இறைவனோடு ஐக்கியமாகாததால், இன்றளவு உலகில் அமைதி நிலவவில்லை. அப்பாவி ஈழத்தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். மியான்மரில் முஸ்லீம்கள் பலர் கொல்லப்பட்டு, லட்சக்கணக்கானோர் அகதிகளாக பங்களா தேசத்தில் தஞ்சம் புகுந்தார்கள். சிரியாவின் மூஸ்லீம் அகதிகள் மேற்கு நாடுகளில் பல்வேறு சொல்லொணாத துயரத்திற்குள்ளான பிறகு அகதிகளாக அனுமதிக்கப்பட்டார்கள். ஆகவே மதங்களின் நோக்கங்கள் நிறைவேறவில்லை என்றுதானே பொருளாகிறது.

47.  ”உண்மைக் கடவுளை’ வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்!
மேலே கூறியவற்றிலிருந்து, மத வழிபாடுகள் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளியை அகற்றி, அவனின் இருப்பை உணரவைக்கவும், அவனோடு ஐக்கியப்படுத்தவும் முடிய வில்லை. அதற்கு மேலே சொன்ன காரணங்களும் இதற்கும் பொருந்தும். அதாவது இடம் மாறி இறைவனை வழிபாடு செய்வது; சரியான அளவு மனபயிற்சி இடம்பெறாதது. குறையான அளவில்தான் மனபயிற்சி செய்கிறார்கள். பெரும்பாலான இந்துக்களின் வழிபாட்டில்  மனபயிற்சியே இல்லை என்பதால், மன அழுத்தத்தையும், மனக்கவலையும் போக்க முடியவில்லை; இளைஞகர்களிடையே ஒழுக்கமும் பண்பும் வளரவில்லை. அதனால் இறைவனுக்கும் (உண்மைக்கும் ) மனிதனுக்கும் உள்ள இடைவெளி அப்படியே இருக்கிறது.

48.  உண்மைக் கடவுளை தினசரி இருமுறை வழிபாடு செய்யும்போது, மனவழுத்தமும் மனக்கவலையும் குறைந்து கொண்டே வருகின்றன; இவ்வாறு அன்றாடம் சேரும் மனவழுத்தத்தை வெளியேற்றும்போது, எதிர்மறைக் குணங்களும் குறைந்து கொண்டே வருகின்றன; அதாவது ஒழுக்கமும் பண்பும் வளர்ச்சியடைகிறது; மனவளம் பெருகிக்கொண்டே வருகிறது; அறியாமை அகன்றுகொண்டே வருகிறது; நல்லது கெட்டது அறியும் அறிவும் வளர்ந்துகொண்டே வருகிறது; உங்களின் உண்மைக் கடவுள் உங்கள் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்த எல்லா உதவிகளையும் செய்கிறான். உங்கள் முன்னேற்றத்திற்குரிய எல்லா சந்தர்ப்பங்களையும் வழங்குகிறான். உங்களுக்கும் உண்மைக் கடவுளுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது.

49.  உண்மைக் கடவுளை வழிபடும் முறை!
மன அழுத்தத்தை போக்க வேண்டுமென்றால், அதை மார்பிலிருந்துதான் போக்க  வேண்டும். அந்த அழுத்தத்தை விரட்டும், மருத்துவ மனப்பயிற்சியை (Medicinal meditation) உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். அதைக் கற்று பயன் பெறுங்கள்

50.  ஒரு சாய்வு நாற்காலியில் நன்றாக வசதியாகச் சாய்ந்து உட்காருங்கள். தலையை சுவற்றில் சாய்க்காமல், சிறிது தாழ்த்தி இருக்கட்டும். மெதுவாகக் கண்களை மூடுங்கள். 10 லிருந்து 15 நொடிகள் மனதில் எந்த எண்ணமும் இல்லாமல் மனதை வெறுமனே வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் மருத்துவ மனப்பயிற்சி நன்கு அமையும்.

51.  . இப்பொழுது மார்பை மனக்கண்ணால் பாருங்கள். அது சுருங்கி விரிவதைக் கவனியுங்கள்; மார்பில் இருக்கம் அல்லது பிடிப்பையும் (மனவழுத்தத்தாலும் மனகவலையாலும் கணம் அதிகமாகி, மார்பில் இருக்கம் அல்லது பிடிப்பு இருக்கும்.) சேர்த்து,மனதில் நினையுங்கள். தொடர்ந்து நினைத்துக்கொண்டே இருங்கள் (கவனித்துக்கொண்டே இருங்கள்). வேறு எண்ணங்கள் வரும்போதெல்லாம், அவற்றை நிறுத்தி விட்டு, மீண்டும் மீண்டும் மார்பையே கவனிக்க வேண்டும்.. மார்பிலிருந்து மன அழுத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கும்.

52.  யாராவது உங்களைப் பார்க்க வந்தால், பயிற்சியை நிறுத்திவிட்டு,10 நொடிகளுக்குப் பிறகு கண்களைத் திறந்து, வந்தவரிடம் பேசிவிட்டு, மீண்டும் வந்து தொடர்ந்து செய்யலாம். பசியோடு இப்பயிற்சியைச் செய்யக் கூடாது மன அழுத்தம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து இடைவெளி விட்டு விட்டு மனக் கணம் குறைந்து இலேசாகும் வரை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

53.  மருத்துவ மனப்பயிற்சியின் போது நடக்கும் நிகழ்வு. 
மருத்துவ மனபயிற்சியுன்போது, உடல் அறிவியற்பகுதியாகவும், மனம் ஆன்மீகப்பகுதியாகவும் பிரிந்து, இணைந்து பணியாற்றி உங்களுக்குப் பலன் கிடைக்கச் செய்கிறது.

54.  சிறப்பு ஒதுக்கப்பட்ட ரத்தம்;
ஆயுத சிறப்புப் படைப் போலீசு (Armed Reserved Police) என்ன செய்கிறது? அடக்க முடியாத கலகம், ஏதாவது ஒரு ஊரில், ஏற்பட்டுவிட்டால், மேலிடத்தின் உத்தரவின் பேரில், அந்த படை அந்த ஊருக்குச் சென்று கலகத்தை அடக்கிவிட்டு தானிருக்குமிடத்திற்குத் திரும்பும். அதேபோலதான், நமது உடலிலும் சிறப்பு ஒதுக்கப்பட்ட ரத்தம் (சிஒர) இருக்கிறது. உங்கள் கவனத்தை, செய்யும் செயலில் அல்லது வேலையில் செலுத்தும்போது, மனதின் உத்தரவின் பேரில் (மனம் கவனிப்பதுதான் உத்தரவு) உடலானது, சிஒர-ஐ செயல்/வேலை செய்யும் உறுப்புகளுக்கு அனுப்பிவிடுகிறது. அந்த ரத்தம் தான் கொண்டு வந்த ஆற்றலை, வேலை செய்யும் உறுப்புக்களுக்குக் கொடுத்து அந்த உறுப்புகளின் தேய்மானத்தைத் தடுக்கவும், வேலை செய்வதால் ஏற்படும் சிரம உணர்வை குறைக்கவும் செய்கிறது.

55.  அறிவியற்பகுதி:
மருத்துவ மனபயிற்சியை ஆரம்பித்தவுடன், மனதின் உத்தரவைப் பெற்ற உடலானது, சிறப்பு ஒதுக்கப்பட்ட இரத்ததை (சிஒர) மார்பிற்கு அனுப்புகிறது.சி.ஒ.ர ஆனது, தான் கொண்டுவந்த ஆற்றலை அந்தப் பகுதிக்குக் கொடுத்து, மன அழுத்தத்தையும், மனகவலையையும் சிறிது சிறிதாக வெளியேற்றிக்கொண்டே இருக்கும். அவைகள் இரண்டும் வெளியேற வெளியேற மார்பின் இறுக்கமும் குறைந்து கொண்டே வரும்.

56.  ஆன்மீக பகுதி:
நீங்கள், மார்பு சுருங்கி விரிவதையும், பிடிப்பு உணர்வையும் கவனித்தவுடன். மனமானது பிடிப்பு அல்லது இறுக்க உணர்வை எடுத்துக்கொண்டு கீழ்நோக்கிப் பயணிக்கிறது. பயண வழியெங்கும் மன அழுத்ததையும், மனக்கவலையையும் வெளியேற்றிக் கொண்டே செல்லும்; அதன்மூலம் இறுக்கமும் குறைந்து கொண்டே வரும். ஆழ்மனதை சென்றடையும் போது, மனதில் இறுக்கமும் இருக்காது; மன அழுத்தமும் இருக்காது; மனதில் கணம் இருக்காது; மனம் இலேசாக இருக்கும். இந்த இடத்தில்தான், மேல் மனம் ஆழ்மனதோடு இணைகிறது. இங்குதான் ஒரு பெரிய நிகழ்வு நடக்கிறது. அப்படி இணையும்போது மேல் மனமானது நித்திய இறைவனின் ஆற்றலை எடுத்துக் கொண்டு மேல் நோக்கி வாழ்க்கையை வளப்படுத்த வருகிறது. இதன் உண்மைத் தன்மையை,  நீங்கள் மருத்துவ மனப்பயிற்சியை தவறாது செய்யும் போது அறிந்து கொள்ள முடியும்.

57.  மேலே குறிப்பிட்ட மருத்துவ மனப்பயிற்சி, மன அழுத்தம், மனகவலை, சர்க்கரை, இரத்த அழுத்தம், இருதய நோய்கள், ஹார்ட் அட்டாக், உடல் பருமன் மற்றும் வலி இல்லாத நோய்களுக்கு மருந்து இல்லாத சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது.

58.  இணைய தளத்தின் வேகம் (Speed of the internet) ஆரம்பத்தில் 2G யில் இருந்தது. இப்பொழுது வளர்ந்து இந்தியாவில் 4G என்ற அளவில் வேகம் வந்து நிற்கிறது. சீனாவில் ஒரு நகரம் முழுவதும் 5G வேக வசதி பெற்று விழா கொண்டாடியிருக்கிறார்கள். இதேபோலத்தான், வழிபாட்டு முறையிலும் உயர்ந்த நிலை இருக்கிறது. மேலே சொன்ன வழிபாட்டு முறையில் காலை 20 நிமிடங்கள், மாலை 20 நிமிடங்கள்,. இரவில் படுக்கையில் படுத்துக்கொண்டே தூக்கம் வரும் வரை இறைவனை நோக்கி (மார்பை நோக்கி) வழிபாடு செய்யச் சொன்னேன் இதில் ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள்தான் வழிபாடு செய்கிறோம். ஆகவே ஆன்மீக ஆற்றலும் 45 நிமிடத்திற்குறிய ஆன்மீக ஆற்றல்தான் கிடைக்கும். அடுத்த கட்டமாக, ஒரு நாள் முழுவதையும் வழிபாடாக மாற்றும் உயர்ந்த ஆன்மீக முறையை இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

59.  வழிபாடுகளில் தாழ்ந்தது உருவவழிபாடு!
முதலில் ”பரிணாம வளர்ச்சி” அல்லது “ஆக்க அறிவு” கடவுளைப் பற்றி விளக்கினேன் இரண்டாவது உண்மைக் கடவுள் இருக்கும் இடத்தைக் காட்டி விட்டேன். இப்பொழுது காட்டப் போவது “தொழில் தெய்வத்தைக்” காட்டப் போகிறேன். இந்த தெய்வத்தை வழிபடும்போதுதான், “தொட்டதெல்லாம் துலங்கும் (Field of all possible )” நிலையும், உங்களது அனைத்து செயல்பாடுகளும் அவனிருக்குமிடத்திலிருந்து மேற்கொள்ளப்படும். “அவனோடு நீங்கள் பேசலாம்; உங்களோடு அவன் பேசுவான்!”

60.  இதுவரை நான் சொல்லிவந்ததிலிருந்து நீங்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்; இறைவனை பரிணாம வளர்ச்சி அல்லது ஆக்க அறிவு என்றும், உண்மை, என்றும் தொழில் என்றும் சொல்லியே வருகிறேன். ”கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல் முறை” புத்தகத்தில் “உணவே பிரம்மன்” என்று  மகான் ‘ஓஷோ’ உபநிடத்திலிருந்து ஒரு கதையின் மூலம் விளக்கியிருப்பதை சொல்லியிருக்கிறேன்.. ஆகவே இறைவன் என்பவன் உருவமில்லாதவன்; அவன் இருப்பை உணர மட்டும் செய்யலாம். ஆகவே அவனை உருவமாக்கி வழிபடுவது, அவனை தரம் தாழ்த்தி வழிபடுவதாகும். சுவாமி விவேகானந்தர், “உருவ வழிபாடுதான், இந்து மததின் வழிபாடுகளில் தாழ்ந்தது” என்று கூறியிருக்கிறார்.


61.  மக்களால் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை, ஆனால் பின்பற்றப்படாத வார்த்தை!

“தொழில் தெய்வத்தை” அடையாளம் காணுவது  எவ்வாறு?
“செய்யும் தொழிலே தெய்வம்” என்று நமது மூதாதையர் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நீங்கள் இவ்வுலகில் வாழ்வதற்கு ஏதாவது ஒரு தொழில் செய்தாக வேண்டும். அந்தத் தொழிலில் நீங்கள் சிறக்க வேண்டுமென்றால், உங்கள் தொழிலில் கவனம் வைக்க வேண்டும்.

62.  ஏற்கனவே “உன் நெஞ்சைத் தொட்டு சொல்லு!” என்ற வார்த்தை படித்த, படிக்காத மக்களிடையே இறைவனால் ‘தானிருக்குமிடத்தை’ தெரிவிக்க,   உலவவிட்ட வார்த்தை. அதேபோலத்தான், மற்றொரு வார்த்தையையும் மக்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள், ஆனால் அந்த வார்த்தையின்படி பின்பற்ற மாட்டார்கள்.

63.  சாலையில் சைக்கிள் ஓட்டி வந்த பையன் கீழே சறுக்கி விழுந்த போது, தூக்கி விட்ட பெரியவர் சொல்லுகிறார் “கவனமாக ஓட்டி வரக்கூடாது!” காய்கறி நறுக்கிக்கொண்டிருக்கிற மனைவி கையை அறுத்துக்கொள்ளும்போது கணவன் கூறும் ஆறுதல் வார்த்தை “கவனமாக பார்த்து அறுக்கக் கூடாது!” பையனின் மார்க் அட்டையைப் பார்த்து “வகுப்பில வாத்தியார் சொல்லித் தரும்போது கவனிச்சாத்தான மார்க் வாங்கப் போற! கிரிக்கெட் விளையாடுறதையே நினைச்சுக்கிட்டிருந்தா!” என்று சொல்லிக்கொண்டே அந்த அட்டையில் கையெழுத்தைப் போடுகிறார் பைனின் தந்தை.

64.  ஒரு வியாபாரி தன் நண்பரிடம் கூறுகிறார் “என் பையனை கல்லாவில் உட்கார வச்சிருந்தேன். கவனக் குறைவால் சில்லரை எண்ணிக்கொடுக்கும்போது ஒரு நூறு ரூபாயை அதிகமாகக் கொடுத்துட்டான்!” இவ்வாறு மக்கள் “கவனம்” என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார்களே தவிர, அதன் உண்மையான பொருளை அறிந்து, கவனத்தை வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் செலுத்த தெரியவில்லை. இந்தக்  “கவனம்” என்ற வார்த்தை உங்களது வாழ்க்கையை எவ்வாறு தலைகீழாகப் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

65.  “தொழில் தெய்வத்தை” ஏன் வழிபட வேண்டும்?

தற்பொழுது மக்கள் வேலை செய்யும்போது, கால் பாகம்தான் வேலையில் கவனத்தைச் செலுத்துகிறார்கள்; முக்கால் பாகம் மனதினை அலை பாயவிட்டு எதையாவது நினைத்துக் கொண்டே வேலை செய்கிறார்கள். இவ்வாறு வேலை செய்வதால், மனதில் மன அழுத்தம் சேருகிறது; பின்னாலேயே மனகவலையும் வந்து விடுகிறது. அதைப் பின்பற்றி நோய்களும் வந்து விடுகின்றன. அப்படி வாழும் தற்போதைய வாழ்க்கைதான் “கற்பனை வாழ்க்கையாகும் (Imagin life)”
இதற்கு மருத்துவ மனபயிற்சி வழிப்பாட்டினை காலை 20 நிமிடங்கள், மாலை 20 நிமிடங்கள் செய்வதால் போக்கிவிடலாம். ஆனால் ஊழ்வினையால் ஏற்படும் பாதிப்புகளால் தோற்றுவிக்கப்படும் மனவழுத்தமும் மனகவலையும் அவ்வளவு சுலபமாக போகாது. உதாரணமாக, இளவயதில் குழந்தைகளோ, கணவனோ, தாய், தந்தையரோ, நெருக்கமான உறவுகளோ அகால மரணமடைந்து விட்டாலோ, பயங்கரமான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டாலோ, அதனால் உண்டாகும் மனவழுத்தமும், மனகவலையும் அவ்வளவு சுலபமாகப் போய்விடுமா! இந்தமாதிரி மனப்பிரச்சனைகளைப் போக்கத்தான் “தொழில் தெய்வத்தை” வழிபட வேண்டும்.

66.  “தொழில் தெய்வத்தில்” அளவிடமுடியாத ஆன்மீக ஆற்றல்! எப்படி!
மேலே கூறப்பட்ட, ‘உண்மைக் கடவுளின்’ வழிபாட்டினை ஒரு ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தபிறகு உங்களுக்கு ஒரு சிறப்பான அனுபவம் கிடைக்கும். அந்த அனுபவத்தை இந்த வழிபாட்டுக்குப் பயன்படுத்துவது உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

67.  இந்த வழிபாடு ஒரு நாள் முழுவதும் செய்யும் வழிபாடாகும். அதாவது 1000 நிமிடங்களிலும் இறைவனை வழிபடுகிறீர்கள். உண்மைக் கடவுளை ஒரு நாளில் 45 நிமிடங்கள் மட்டும் வழிபடுகிறீர்கள்; அப்படியானால், ஆன்மீக ஆற்றல் எவ்வளவு கிடைக்கும் என்று நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள்!  மிக அதிக அளவு ஆன்மீக ஆற்றல் கிடைக்குமல்லவா! அந்த அளவு ஆற்றலில்தான், நீங்கள் ஆன்மீகத்தில் முழுமை பெறுகிறீர்கள்;  உங்கள் மனதில் உள்ள மனவழுத்தமும் மனகவலையும் முற்றிலுமாக அகற்றப்பட்டு, மனம் தூய்மையான பளிங்குத தண்ணீரைப் போல களங்கமற்று இருக்கும்; ‘

68.  உண்மைக் கடவுளோடு’ ஐக்கியமாகி விடுகிறீர்கள். ‘தொட்டதெல்லாம் துலங்குகிறது” எந்தவித பயத்திலிருந்தும் முற்றிலுமாக நீங்கிவிடுகிறீர்கள். இறைவன் எப்போதும் எல்லாவற்றிற்கும் பாதுகாவலனாக இருப்பான்; அறிவுரை வழங்குபவனாக இருப்பான்; உங்களது வாழ்க்கை வளமாவதற்கு வேண்டிய பாதையை காட்டிக்கொண்டே முன் செல்வான். வேறு என்ன வேண்டும்; அனைத்தையும் தருவான். அந்த வாழ்க்கை வாழுவதுதான் “கவனவாழ்க்கையாகும் (Attentive life)” இறைவனை விட்டு பிரிவதற்கு முன்பு ஆதாமும் ஏவாளும் “கவனவாழ்க்கை”தான் வாழ்ந்தார்கள்.

69.  “தொழில் தெய்வத்தை” வழிபடும் முறை!
காலையில் எழுந்தது முதல் படுக்கப்போவது வரை உங்களது செயல்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும். குளிக்கும்போது குளிக்கும் செயலிலும், சாப்பிடும்போது சாப்பிடுவதிலும், நடக்கும்போது நடையிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும். அதாவது வேறு எண்ணங்கள் வரும்போதெல்லாம், அந்த எண்ணங்களை நிறுத்திவிட்டு, செயலில் அல்லது வேலையில் மனதின் கவனத்தை ஈடுபடுத்தச் செய்ய வேண்டும்.

70.  வேலையில் கவனத்தைச் செலுத்தும்பொழுது என்னென்ன நிகழ்வுகள் நடக்கின்றன?
தொழில் தெய்வத்தை வழிபடும்போதும், உடல் அறிவியற்பகுதியாகவும், மனம் ஆன்மீகப் பகுதியாகவும்   இரண்டாகப் பிரிந்து பிறகு இணைந்து பணியாற்றுகின்றன.

71.  அறிவியற் பகுதி:
குளிக்கும் செயலில் கவனத்தை செலுத்துகிறீர்கள்; கவனத்தைச் செலுத்தியவுடன், மனதின் உத்தரவின் பேரில், சிஒரத்தமானது, உடலை தேய்த்துக்கொண்டிருக்கும் கைகளுக்கு சென்று, அது கொண்டுவந்த ஆற்றலை கைகளுக்குக் கொடுத்து, அவைகளின் தேய்மானத்தைக் குறைக்கிறது.

72.  ஆன்மீக பகுதி: மனமானது கைகளால் தேய்க்கும்போது உங்களுக்கு ஏற்படும் சிரம உணர்வையும், மன அழுத்ததையும், மனக் கவலையையும் எடுத்துக் கொண்டு கீழ் நோக்கி அல்லது உள்நோக்கிப் பயணிக்கிறது: சென்றுகொண்டே வழிநெடுக சிரம உணர்வையும், மன அழுத்ததையும், மனக் கவலையையும் விட்டுக் கொண்டே செல்கிறது. அவ்வாறு சென்று ஆழ்மனதை அடையும்போது, சிரம உணர்வும் இருக்காது, மன அழுத்தமும், மனக் கவலையும் இருக்காது; அந்த நிலையில், மேல் மனம், ஆழ்மனதுடன் ஐக்கியமாகி, நித்திய ஆற்றல் என்னும் இறை ஆற்றலை எடுத்துக் கொண்டு மேல் நோக்கி வருகிறது; அவ்வாறு கிடைக்கும் இறை ஆற்றல்தான் உங்களுடைய வாழ்க்கையை வளப்படுத்துகிறது. மேலே குறிப்பிட்ட அதிசயங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன.

73.  கவனவாழ்க்கையிலிருக்கும்போது, நீண்ட நேரம் யோசிக்கக் கூடாது; திட்டம் தீட்டக் கூடாது; யோசித்து முடிவு எடுக்கக் கூடாது. நீங்கள் “அக்கணத்தில் வாழவேண்டும்” இறந்த காலத்திற்காகவோ, எதிர்காலத்திற்காகவோ வாழக்கூடாது. அப்படி வாழும்போதுதான், துன்பங்களும் துயரங்களும் வருகின்றன.

74.  நமது இந்து மத மகான்கள் ரவி சங்கர் ஷீ, அமிர்தானந்த மயீ ஆகியோர் “நிகழ்காலத்தில் வாழ அதாவது அக்கணத்தில் வாழ” அறிவுறுத்தியிருக்கிறார்கள்.  மகான் ஜே.கே என்னும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் “ஒரு நாளில் இருவேளை தியானம் செய்வதைக்காட்டிலும், நாள் முழுவதையும் தியானமாக்குவதுதான் சிறந்த பலனளிக்கும்” என்று சொல்கிறார்.  கிருஷ்ண பகவான் “செய்யும் தொழிலில் அல்லது செயலில் முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள். அது மனதின் அமைதிக்கும், வாழ்க்கை வளத்திற்கும் வழிவகுக்கும்” என்று செய்யும் தொழிலில் தெய்வமிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.  அப்படி வாழும்போதுதான், மேற்கூறிய அதிசயங்கள் நடக்கும்.

கவனவாழ்க்கை வாழுக! வளர்க வளமுடன்!
ஹீலர் ஆர்.எ.பரமன் (அரோமணி)
                                                                 Updated: 21-6-2019

முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: