Monday, September 22, 2014

ஆசை வாழ்க்கை-6



ஆசைப்பட்டபடி கிடைக்கும் வாழ்க்கை (life)

C 244 MM 2-மருத்துவ மனபயிற்சி 6

இரட்டை மருத்துவம்- மருத்துவ மனபயிற்சி மருத்துவம் பகுதி 2
  Twin Medicine- Medicine of Medicinal Meditation Part II-Attentive Life 6-TAMIL                                 
                           கவன வாழ்க்கை 6
மூலவேரை அறுக்கவேண்டும்.
1..நோய்களை முழுவதும் விரட்ட வேண்டுமென்றால், நோய்களின் மூலவேரான எதிர்பார்த்தலை(Expectation) அறுக்க வேண்டும். இதனை அறுத்தவுடன் ஏமாற்றம் (Disappointment) அறுக்கப்படுகிறது. இந்த நிலையில்தேடுதலை நிறுத்துங்கள்; தேடுதல் கிடைக்கும்’, என்னும் மகான் ஓஷோவின் அருள்வாக்கிற்கு அர்த்தம் கிடைக்கும்.
2. எதிர்பார்த்தலுக்கு மூலவேர், மனிதனின் கற்பனை, திட்டமிடுதல், யோசித்து முடிவெடுத்தல் ஆகிய மூன்றின் சேர்க்கையிலிருந்து ஆரம்பமாகின்றன. இந்த மூன்றினையும் வேரோடு பிடிங்கி எறிந்துவிட்டால், எதிர்பார்த்தல் என்னும் பெரியவேர் உயிரற்றுவிடும். கற்பனை, திட்டமிடுதல், யோசித்து முடிவெடுத்தல் ஆகிய மூன்றும் மனிதனின் அறிவின் ஊற்றுக்களாகும். இம் மூன்றின் ஓட்டத்தை நிறுத்த வேண்டுமென்றால், மனிதனின்அறிவின் ஊற்றுத் (human intelligence)’ துவாரத்தை அடைத்துவிட வேண்டும்.

3. கற்பனை செய்வது நல்லதா, கெட்டதா?
கற்பனை என்பது என்ன என்பதை முதலில் ஆராய்வோம். எண்ணங்கள் உற்பத்தியாவது தானாகவே நடைபெறுகிறது! உறவுகளில் மற்றும் சுற்றுப்புறங்களில் ஏற்படும் நிகழ்வுகள், பார்க்கும் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் ஆகியவற்றைச் சம்பந்தப்படுத்தி உடனே கடந்தகால, நிகழ்கால, மற்றும் எதிர்கால ஆகிய காலங்களை இணைத்து எண்ணங்கள் தோன்றுகின்றன. சில வாசனைகளை நுகரும்போதும், சில பாடல்களைக் கேட்கும்போதும் எண்ணங்கள் தோன்றுகின்றன. இந்த எண்ணங்களில் சில அவசியமானதாகவும், சில அவசியமானதாக இல்லாமலும், சில அநுபவத்தை தருபவையாகவும், சில உணர்ச்சிகளைத் தூண்டுபவையாகவும் இருக்கலாம்.

4. மேற்குறிப்பிட்ட எண்ணங்களை நாம் நினைத்தால் நீடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை மற்றும் அதற்குறிய ஆற்றலை மட்டும் இறைவன் மனிதவர்க்கத்திற்குக் கொடுத்திருக்கிறான். ஆனால் நாம் அதனைப் பயன்படுத்தாமல், உற்பத்தியாகும் எண்ணங்களை நீடிக்கவிட்டு அதன் வாயிலாக வேறு பல எண்ணங்களை உற்பத்திசெய்ய வைத்து, கோபம், பயம், பதட்டம், பொறாமை, வெறுப்பு, திருட்டுகுணம், போதைக்கும் குடிக்கும் அடிமையாகும் குணம், காமவெறி, கொலை வெறி மற்றும் அனைத்து எதிர்மறைக் குணங்களும் நமது மனதினை ஆக்கிரமிக்க இடம் கொடுக்கிறோம். ஆக்கிரமித்த அந்த குணங்கள் நமது நாடி நரம்பு,மற்றும் சதை, எலும்புகளை சின்னாபின்னமாக்கி சீரழித்து விடுகின்றன. நோய்களின் ஆட்சிக்கு நமது உடல் உட்படுத்தப்படுகிறது. வாழ்க்கையில் பின்னடைவு ஏற்படுகிறது. சொல்லொண்ணாத துயரத்திற்குள்ளாகிறோம். துயரங்களை எதிர்த்துப் போராட முடியாதவர்கள் இந்த உலகில் தங்களுக்குள்ள கணக்கை முடித்துக் கொள்கிறார்கள். கற்பனையால் ஏற்படும் அழிவை சுனாமினால் ஏற்படும் அழிவைக் காட்டிலும் பல மடங்குக்கு அதிகமாகவே ஒப்பிடலாம். சுனாமினால் ஒருவன் ஒரு தடவையில் செத்துவிடுகிறான். ஆனால் கற்பனை வாழ்வில் தினம் தினம் செத்துப் பிழைக்கிறான்.

5. ஒருவர், கற்பனையில் அழகான அறிவான குணவதியான பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். வீரதீரம் மற்றும் அறிவு நிறைந்த அழகான ஆண், பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம். பரந்த இடபரப்பு கொண்ட, நகரத்தின் முக்கிய இடத்தில் அமைந்துள்ள வீட்டு மனையில் ஒரு அழகிய பங்களாவைக் கட்டி ஆடம்பரமாக கிரகப்பிரவேசம் நடத்திவிடலாம். விலை உயர்ந்த காரில் வந்து குடும்பத்துடன் கலகலப்பாக மகிழ்ச்சியுடன் இறங்கலாம். சாதனைகள் புரிந்து குடியரசுத் தலைவரிடம் பரிசுகள் பல பெறலாம். இவ்வளவும் ஒரு சில நிமிடங்களில் கற்பனையில் கிடைத்துவிடும்.

6. ஆனால் உண்மை நிலை என்ன! ஒரு சிறிய வீட்டைக் கட்டுவதற்குப் பல வருடங்கள் ஆகலாம். வீடு கட்டமுடியாமலும் போகலாம். திருமணம் நடைபெறலாம். ஆனால் கனவுக் கன்னியுடன் அல்ல. குழந்தைகள் பிறக்கலாம். ஆனால் நினைத்தபடி அல்ல. ஆண், பெண் குழந்தைகளாக இல்லாமல் ஆண் குழந்தைகளாகவே பிறக்கலாம் அல்லது பெண் குழந்தைகளாகப் பிறக்கலாம். பிறக்கும் குழந்தைகளில் ஒன்றிரண்டு ஊணமாகப் பிறக்கலாம். குழந்தைகள் பிறக்காமல் கூடப் போகலாம். யதார்த்த வாழ்க்கையில் ஒரு சாதனை கூட செய்து மாவட்ட அளவில் கலைக்டரிடம் கூட விருது பெறாத நிலை ஏற்படலாம்.

7. கற்பனையால் ஏற்படும் சீரழிவுகள்!
விரகன் ஏழ்மையால் மிகவும் துன்பத்திற்குள்ளாகியிருந்தான். சாப்பாட்டிற்கே வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டான். உயிரை மாய்த்துக் கொள்வது என்று முடிவெடுத்தான். மலை உச்சியை நோக்கி நடந்தான். உச்சியை நெருங்குவதற்கு முன்பு ஒரு குகையைப் பார்த்தான். அந்த குகைக்குள் மெதுவாக நுழைந்து எட்டி உள்ளே பார்த்தான். அங்கே முனிவர் ஒருவர் அப்பொழுதுதான் மனப்பயிற்சியை (தவத்தை) முடித்துவிட்டு எழுந்திருப்பதைப் பார்த்தான். இவனை அவர் பார்த்துவிட்டார்.

8. வறுமையால் வாடுவதாகவும், சாவதற்கு மலை உச்சிக்குப் போய்க் கொண்டிருப்பதாகவும் முனிவரிடம் சொன்னான். அவனுடைய கொடுமையான வறுமைதான் அவனைத் தற்கொலை செய்யும் முடிவுக்குத் தூண்டியிருக்கிறது என்பதை முனிவர் புரிந்து அவனுக்காக இரக்கம் கொண்டார்.

9. “ நீ சாகவெல்லாம் வேண்டாம்! இங்கிருந்து மலை உச்சிக்குப் போகும் சிறிது தூரத்தில் ஒரு ஆல மரம் ஒன்று இருக்கும். அதுக்குப் பக்கத்தில கருவேல மரம் இருக்கும். அந்த மரத்துக்குக் கீழே பூமியை தோண்டு. இரண்டு பொற் காசுகள் நிரம்பிய மண் குடங்கள் இருக்கும். அதில ஒன்றை எடுத்துட்டுப் போயி மகிழ்ச்சியா வாழ்க்கையை நடத்து! போயிட்டு வா!” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார்.

10. அவர் சொன்னமாதிரியே கருவேல மரத்துக் கடியில் இரண்டு பொற்காசுகள் நிரம்பிய மண் குடங்கள் இருப்பதைக் கண்டவுடன் வியப்பில் ஆழ்ந்து கண்களை மூடினான். விரகனின் மனதில் எண்ணோட்டம் வேகமாக ஓடியதுஒரு பொற்காசுப் பானையைத்தானே முனிவர் எடுத்துக் கொள்ளச் சொன்னார்!.........ஒரு பானைக் காசை வைத்து நூறு ஏக்கர் நிலம் வாங்கி ஒரு பெரிய பங்களா வீடும் கட்டலாம்! இரண்டையும் எடுத்துட்டுப் போனால் இன்னும் ஒரு நூறு ஏக்கர் வாங்கி ஐந்து பிள்ளைகளுக்கும் ஐந்து மாடி வீடுகள் கட்டி விடலாம் ,” கண்களைத் திறந்த விரகன் இரண்டு பானைகளையும் எடுத்து மட்டற்ற மகிழ்ச்சியுடன் வீட்டுக்குப் புறப்பட்டான்.

11. அவன் செல்லும் வழியில் வழிப்பறிக் கொள்ளையர்கள் அவனிடமிருந்த இரண்டு பொற்காசுப் பானைகளையும் பிடுங்கிச் சென்றுவிட்டனர். விரகன் மிகவும் ஆழ்ந்த வருத்தத்துடன் மீண்டும் முனிவரிடம் வந்து நடந்ததைச் சொன்னான். ஆனால் பிடுங்கி சென்றது இரண்டு பானைகள் என்பதை மறைத்து ஒரு பானை என்று சொல்கிறான். அதற்கு முனிவர்அதனாலென்ன! இன்னொரு பானை இருக்குள்ள! அதை எடுத்துக்க! போயிட்டு வா!” என்றார். விரகன் ஒன்றும் பேசாமல் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு குகையை விட்டு வெளியேறினான்.

12. விரகன், தனது மனதில் ஓடும் எண்ண ஓட்டத்தை தடுத்து நிறுத்தாததால், பல தவறுகளைச் செய்கிறான். முதல் தவறாக முனிவர் கொடுத்த வரத்தை மீறுகிறான்; அதனால் அவரின் நம்பிக்கைத் துரோகத்திற்கு ஆளாகிறான். இரண்டாவதாக ஆசை பேராசையாக மாறுகிறது. மூன்றாவதாக முனிவரிடம், தான் எடுத்துச் சென்றது ஒரு குடம்தான் என்று பொய்யும் சொல்கிறான். இவ்வாறு விரகன் செய்த கற்பனை, அவனின் அழிவிற்கு காரணமாகிவிடுகிறது.

13. முருகன் மனதில் தன் நண்பன் உயிருக்குப் போராடிய காட்சி மனக்கண்ணைவிட்டு அகலவே யில்லை. “அயோக்கிய பய....” என்று சொல்லிக் கொண்டே பற்களை நர நரவென்று கடித்தான். தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த படத்தில் அவனால் கவனத்தைச் செலுத்தமுடியவில்லை. அவன் நண்பன் பரமசிவம்பற்களை நர நரன்னு கடிச்சியே! இன்னும் மறக்கலையா! மறக்கனுமுனுதானே படத்துக்கு கூப்பிட்டு வந்தேன். படத்தையே பார்க்கலையா? என்று கேட்டான். “எப்படிடா மறக்கிறது! எவ்வளவு நேரம் கெஞ்சினோம் தெரியுமா! எங்க வேண்டுதலை நிறைவேத்தியிருந்தா என் நண்பன் உயிரை காப்பாத்தியிருப்போம்.” என்று சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி அழுதான். பரமசிவம் அவன் தோல்களைக் கட்டிக் கொண்டுஎன்னடா பொம்பளை மாதிரி அழுதுகிட்டு! படத்தைப் பாரு! பாதுகாப்பு வளையத்தில இருக்கிற ஆனந்தராஜை எப்படி நம்ம கேப்டன் வெளியேத்தி அடிக்கிறார் பாரு!” என்று கவலையில இருக்கிற நண்பனுக்கு அவனுடைய கவனத்தைத் திருப்பும்படியான ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான். அழுததால் மனவழுத்தம் குறைந்துவிட்டபடியால். முருகனும் படத்தில் கவனத்தைச் செலுத்தினான்.

14. அது 4 மாடிக் கட்டிடம். அதில் வெங்கடேஸ்வரா மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டி ருக்கிறது. அது ஒரு தனியார் மருத்துவ மனை. சுந்தரம் அந்தப் பகுதியில் ஒரு மிகவும் புகழ்பெற்ற இருதய நிபுணர். அவர்தான் அதன் உரிமையாளர். அன்று காலை சுமார் 11 மணியிருக்கும். கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கோபால் தன் இருக்கையையும் கம்ப்யூட்டரையும் பிரிண்டரையும் தூசி தட்டித் துடைத்துவிட்டு உட்கார்ந்து கம்ப்யூட்டரை இயக்கினான்.

15. இண்டர் நெட்டைத் திறந்து ஈமெயில் தபால்களைப் பார்க்கலானான். பார்த்துக் கொண்டே வரும்போது, ஒரு மெயிலைப் பார்த்து பயந்து உறைந்து விட்ட நிலைக்கானான். பக்கத்திலிருந்த நண்பன் குமாரை அழைத்து விரலால் கம்ப்யூட்டரைச் சுட்டிக் காட்டி படிக்கும்படி சைகையால் தெரிவித்தான். படித்த நண்பனும் பதட்டத்துக்குள்ளாகிஎன்னடா பேசாம மச மசன்னு உக்காந்திருக்க! எம்.டி. க்குப் போனைப் போடு!” கோபால் போனில்சார் எம்.டி ங்களா! நம்ம ஆஸ்பத்திரில நாலு மாடிலேயும்பாம்(bomb)’வெச்சிருக்காங்களாம். இன்னும் ஒரு மணி நேரத்தில வெடிச்சிருங்களாம்!” என்று சொன்னான். போனின் மறுபக்கத்தில் எம்.டி. சுந்தரத்தின் பதட்டத்தை கோபாலால் பார்க்க வாய்ப்பில்லை. பதட்டத்தில் டாக்டர் சுந்தரத்திற்கு போலிசின் அவசர எண் 100 என்பதைக் கூட மறந்து விட்டார். பக்கத்திலிருந்த உதவியாளரிடம்போப்பா! சீக்கிரம்! போலிஸ்டேசன் போன் நம்பரை டைரக்டரிலிருந்து எடுத்துட்டு வா!” பதட்டத்துடனும், பரபரப்புடனும் கவலையுடனும் சொன்னார்.

16. அடுத்த அரை மணி நேரத்திற்குள் இரண்டு போலீஸ் வாகனங்களில் மள மள வென்று வெடி குண்டைச் சோதிக்கும் கருவிகளுடனும் மோப்பம் பிடிக்கும் நாய்களுடனும் போலீஸ்காரர்கள் வந்து இறங்கினார்கள். எம்.டி. சுந்தரத்திடம்நோயாளிகள் பீதியடையாமல், அவர்களை கட்டிடத்தை விட்டு அப்புறப்படுத்தும்படி போலீசார் அறிவுறுத்தினர். அடுத்த சில நிமிடங்களில் கை ஒலிபெருக்கிகள்நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் அனைவரும் கட்டிடத்தை விட்டு உடனே வெளியேறும்படி காவல்துறை கேட்டுக் கொள்கிறது”, என்று அலறின. உள்ளிருந்தவர்கள் அலறிப்புடைத்துக் கொண்டு பதட்டத்துடனும், பரபரப்புடனும், பயத்துடனும் வெளியேறிக் கொண்டிருந்தனர். சாலையில் போய்க் கொண்டிருந்தவர்கள் அப்படி அப்படியே நின்று பீதியுடன் புரியாமல் மருத்துவமனையின் நுழைவாயிலையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்குள் அந்தப் பகுதியே கலவரப் பகுதியாகக் காட்சியளித்தது. தூரத்தில் ஒருவன் நடப்பதை அசையாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் புன்முறுவல் இழையோடிக்கொண்டிருந்தது. ‘எது நடக்கவேண்டுமென்று விரும்பினானோ அதுமாதிரியே நடந்து கொண்டிருப்பதற்கானதிருப்தி அவன் முகத்தில் பளிச்சிட்டது.மூன்று மணி நேர சோதனைக்குப் பிறகு, போலீசார் எம்.டி. சுந்தரத்திடம்வெறும் புரளிதான்”, என்று சொல்லிவிட்டு புறப்பட்டனர். ‘சைபர் கிரைம்போலீசார் தீவிர புலன் விசாரணைக்குப் பிறகு முருகனை கைது செய்து ஸ்டேசனுக்கு அழைத்து வந்தனர்.

17. “இம்! சொல்லுப்பா! நிறையப் படிச்சிருக்க! நல்ல வேலையில வேற இருக்க. ‘பாம்இருக்குன்னு பொய்யா ஏன் .மெயில் அனுப்பிச்ச? அந்த ஆஸ்பத்திரி மேல உனக்கு என்ன கோபம்?”என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். எதுவும் பேசாமல் இருந்தான். “ இம்! சொல்லு! நீ பேசாம இருந்தா, நாங்க வேறுமுறையில விசாரிக்க வேண்டியது வரும்!”
18. “ எல்லாத்தையும் சொல்லிடுறேன் சார்! அந்த டாக்டர் என் உயிர் நண்பனை அநியாயமா கொன்னுட்டான் சார்! ஒருவாரத்துக்கு முன்னாடி எனது நண்பனுக்கு மூளையில நரம்பு வெடிச்சு இரத்தக் கசிவு ஏற்பட்டு இவன் ஆஸ்பத்திரில சேர்த்திருந்தோம். முதல் நாலு நாள் சிகிச்சையில என் நண்பனுக்கு சுய நினைவு வந்திருச்சு. “நோயாளியிடம் அதிகமாகப் பேசாதீங்க. இரண்டாவது ஸ்ட்ரோக் வந்துட்டா என்னால காப்பாத்த முடியாது!” என்று அவன் சொன்னான். எங்களுக்குப் பயம் வந்திருச்சு. எனது நண்பனுக்கு மிகவும் வேண்டிய டாக்டர் மூளை சம்பந்தமான நோய்களுக்கு ஸ்பெஷலிஸ்ட். சென்னையில இருக்காரு. அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களைச் சொல்லி விமானத்தில் புறப்பட்டு வரச் சொன்னோம். அதற்கு அவர்அந்த டாக்டர் வேறு டாக்டர் எவரையும் அனுமதிப்பதில்லை. ஏற்கனவே அவரோடு ஒரு கசப்பான அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கு. ஆம்புலன்ஸ்ல எல்லா வசதியும் இருக்கு. அதுல வச்சு சென்னைக்குக் கொண்டு வந்திருங்க. நான் காப்பாத்திடுறேன்,” என்று சொன்னார். அதை டாக்டர் சுந்தரத்திடம் சொன்னோம். அதற்கு அவன் கோபத்தில் சத்தம் போட்டுஉங்க நண்பருக்கு எந்த நேரத்திலும் இரண்டாவது ஸ்ட்ரோக் வரலாம். இந்த நிலையில் நான் டிஸ்சார்ஜ் செய்து அனுப்ப மாட்டேன்”, என்று சொன்னான். அதற்கு எனது நண்பனது மனைவியும் நாங்களும்சார்! நீங்கள் எப்படி எழுதிக் கேட்டாலும் எழுதித் தருகிறோம். டிஸ்சார்ஜ் செய்யுங்கள்என்று கெஞ்சிக் கேட்டோம். அவன் மறுத்துவிட்டான். டாக்டர் சத்தமாகப் பேசியது நண்பரின் காதிலும் விழுந்துவிட்டது. இதனால் தனக்கு என்ன நோய் என்பதை அறிந்தவுடன் அவனுடைய கண்களிலிருந்து நீராக வடிந்தது. அன்று இரவு நடு இரவில் இரண்டாவது ஸ்ட்ரோக் வந்து இறந்து விட்டான் சார்”, என்று சொல்லிவிட்டுக் குலுங்கிக் குலுங்கி அழுதான். இன்ஸ்பெக்டர் முருகன் மீது இரக்கம் கொண்டார்அழுகையை நிறுத்து! ஏட்டையா ஒரு டீ கொண்டு வந்து முருகனுக்குக் கொடுங்க!”

19. முருகனுக்கு டாக்டர் மீதுதான் கோபம். அந்தக் கோபம் எத்தனை நோயாளிகளுக்கு மூன்று மணி நேர துயரத்தைக் கொடுத்துவிட்டது! சில நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சைகள் தள்ளிப் போயிருக்கலாம்; சில அவசர கவனிப்புத் தேவைப்பட்ட நோயாளிகள் சிகிச்சைகள் தள்ளிப் போனதால் இறந்தும் போயிருக்கலாம்.

20. அவனது நண்பணுக்கு நடந்த கொடூரமான சம்பவம் மீண்டும் மீண்டும் அவன் நினைவில் வந்து அவனைத் தூங்கவிடவில்லை என்பது உண்மைதான். அதற்காக பின்விளைவுகளை சிந்திக்காமல் தவறு செய்துவிட்டான். சரியான பயிற்சியின் மூலமே தொடர் எண்ண ஓட்டத்தை நிறுத்தி சகஜ நிலைக்கு வர முடியும். சகஜ நிலைக்கு வந்திருந்தால் டாக்டர் செய்த தவறுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் நிதான யோசனை வந்திருக்கும்.
                                                                                                                                                  ( தொடர்ச்சி--6A படிக்கவும்)
முந்தைய விளம்பரம்
அடுத்த விளம்பரம்

0 Post a Comment: